
Dass – NEWS 6
54 hours in the well: a miracle survival for woman in China
பெய்ஜிங், செப்டம்பர்-29,
சீனாவில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த சம்பவமொன்றில், 48 வயது பெண் ஒருவர் 54 மணி நேரங்களுக்கு கிணற்றுக்குள் சிக்கித் தவித்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 13-ஆம் தேதி காட்டில் நடைபயிற்சி சென்றிருந்தபோது, கைவிடப்பட்ட கிணற்றுக்குள் அவர் தவறி விழுந்தார்.
அவர் வீடு திரும்பாததால் பதறிப்போன குடும்பத்தார் அடுத்த நாளே போலீஸில் புகார் அளித்தனர்.
செப்டம்பர் 15-ம் தேதி ட்ரோன் (drone) உதவியுடன் தேடுதல் நடத்தி, மீட்புப்படையினர் அவரது மெல்லிய குரலைக் கேட்டு அவரிருக்குமிடத்தைக் கண்டுபிடித்தனர்.
தண்ணீர் நிரம்பிய கிணற்றுக்குள், சுவரில் உள்ள கற்களை பிடித்தபடி அவர் இரண்டு நாட்களுக்கு மேல் உயிருடன் இருந்துள்ளார்.
கொசுக்களால் கடிக்கப்பட்டும், நீர் பாம்பு கடித்தும் அவர் வலியால் தவித்தார்.
அதிர்ஷ்டவசமாக அது விஷமில்லாத பாம்பு…
மீட்புக்குப் பிறகு அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கிணற்றில் விழுந்ததில் இரண்டு விலா எலும்புகள் முறிந்து, நுரையீரலில் சிறிய காயம் ஏற்பட்டிருந்தாலும் தற்போது அவரின் நிலைமை சீராக உள்ளது.
“வயது முதிர்ந்த என் பெற்றோர்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் மகளுக்காக உயிரை விடக்கூடாது என தீர்மானித்தேன்” என்று அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த அசாதாரண உயிர்ப்பிழைப்பு, சீன சமூக ஊடகங்களில் பேச்சுப் பொருளாகியுள்ளது.
பலரும் “இது ஒரு அதிசயம்” என புகழ்ந்து வருகின்றனர்.