
கோலாலம்பூர், ஏப்ரல்-15, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சீன அதிபர் சீ சின் பிங்கின் இன்றைய வருகையை ஒட்டி, போதுமான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதை உறுதிச் செய்யுமாறு, போக்குவரத்து நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனை வலியுறுத்தியுள்ளார்.
ஆசிய வல்லரசு நாட்டின் தலைவர் வருவதால், பாதுகாப்புக் கருதி ஏராளமான முக்கியச் சாலைகள் மூடப்படுகின்றன; இதனால் பொது மக்களுக்குப் ஏற்படும் அசௌகரியத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளது.
எனவே, மக்கள் குறிப்பாக வாகனமோட்டிகளுக்கு ஏற்படும் இடையூறுகளைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து நடத்துநர்கள் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதே சமயம் பொது மக்களும் தங்களின் பயணத்தை முன் கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது; இயன்ற அளவு மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.
பிரதமரின் மூத்த பத்திரிகைச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபாய்டா, நேற்று மாலை நடத்திய தினசரி நேரலை விளக்கமளிப்பில் அதனைத் தெரிவித்தார்.
சீன அதிபரின் பேராளர் குழுவுக்கு வழிவிடும் வகையில் 30 முதல் 45 நிமிடங்களுக்கு பாதைகள் முழுமையாக மூடப்படும் அல்லது திருப்பி விடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ELITE, MEX, SUKE, NPE, KESAS, SMART சுங்கப் பாதை உள்ளிட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் புத்ராஜெயாவில் பெர்சியாரான் செலாத்தான், லெபோ கெமிலாங் உள்ளிட்ட சாலைகளும் அவற்றிலடங்கும்.