
சுங்கை சிப்புட், ஏப்ரல்-10, பேராக், சுங்கை சிப்புட் அருகே ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 67 வயது முதியவர் இறந்து கிடக்கக் கண்டெடுக்கப்பட்டார்.
சாலையோரத்தில் சைக்கிளுக்கு அருகே அவரின் சடலம் இருப்பதைக் கண்டு நேற்று காலை 10 மணிக்கு மேல் பொது மக்கள் தகவல் கொடுத்ததாக, சுங்கை சிப்புட் போலீஸ் இடைக்காலத் தலைவர் DSP மொஹமட் ரொஹைசிமி ரசாலி கூறினார்.
சம்பவத்தின் போது, ஈப்போவில் உள்ள தனது வீட்டிலிருந்து சுங்கை சிப்புட்டுக்கு அவர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
எனினும் சம்பவ இடத்தை நெருங்கும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்து உயிரிழந்தார்.
சுங்கை சிப்புட் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சவப்பரிசோதனையிலும், மாரடைப்பே அவரின் மரணத்திற்கு காரணம் என உறுதியானது.
சைக்கிளுக்கு எந்த சேதாரமும் இல்லை; ரொக்கப் பணம், கைப்பேசி உட்பட அவருக்குச் சொந்தமான பொருட்களும் அப்படியே இருந்தன.
குற்ற அம்சங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்பதால், அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.