
சுபாங் ஜெயா, ஆகஸ்ட்-18 – கொலைச் செய்யப்பட்டதாக நம்பப்படும் கல்லூரி மாணவி ஒருவர் வீட்டின் வரவேற்பறையில் உள்ள மின் விசிறியில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிலாங்கூர், சுபாங் ஜெயா, USJ 2/1 -வில் வியாழக்கிழமையன்று இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காலை 11.55 மணியளவில் 20 வயதிலான மகளை அக்கோலத்தில் கண்டதாகக் கூறி தந்தை போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.
போலீஸ் வந்து பார்த்த போது அப்பெண் இறந்துபோயிருந்தார்.
எனினும் செர்டாங் மருத்துவமனையில் சவப்பரிசோதனை நடத்தப்பட்டதில், கையால் நெரிக்கப்பட்டு கழுத்து எலும்பிலும் தசைகளிலும் ஏற்பட்ட இரத்தக் கசிவே மரணத்திற்குக் காரணம் என உறுதிப்படுத்தப்பட்டது.
மரணமடைந்த மாணவி தனது அக்காள் மற்றும் உறவினர் ஒருவரோடு அவ்வீட்டில் வசித்து வந்தார்.
ஆனால் சம்பவத்தின் போது அவர் தனியாகத்தான் இருந்துள்ளார்.
அவர்கள் தங்கியிருந்தது குடும்ப வீடு என்றும், பொருட்கள் ஏதும் காணாமல் போனதாக தகவல் இல்லையென்றும் சுபாங் ஜெயா போலீஸ் கூறியது.
கொலைச் சம்பவமாக வகைப்படுத்தி போலீஸ் விசாரித்து வரும் நிலையில், இதுவரை யாரும் கைதுச் செய்யப்படவில்லை.