
பெய்ஜிங், மே-17-பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப்பின் சீனப் பயணம் நிறைவடைந்துள்ள நிலையில், வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் இடையிலான இணையப் பாதுகாப்பு பதற்றம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சீனாவில் தங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து மின்னியல் சாதனங்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை, அமெரிக்க பேராளர்கள் Air Force One விமானத்தில் ஏறுவதற்கு முன்பாகவே குப்பையில் வீசியெறிந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெய்ஜிங் விமான நிலைய ஓடுதளத்தில் பிறப்பிக்கப்பட்ட கடுமையான உத்தரவைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அங்கிருந்து எந்தவொரு பொருளையும் விமானத்திற்குள் கொண்டுச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், வெள்ளை மாளிகை ஊழியர்களும் ஊடகவியலாளர்களும் தங்களின் தற்காலிக இரகசியக் கைப்பேசிகள், அங்கீகார அட்டைகள் மற்றும் நினைவுப் பரிசுகளை விமானப் படிக்கட்டின் கீழ் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் கொட்ட வேண்டியதாயிற்று.
சீனாவின் இணைய உளவு பார்ப்பு, கண்காணிப்பு மற்றும் malware வைரஸ் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்காகவே அமெரிக்க பாதுகாப்புப் பிரிவினர் இந்த கடுமையான விதியை அமுல்படுத்தியுள்ளனர்.
ட்ரம்ப்பின் சீனப் பயணம் பொருளாதார ஒத்துழைப்பை மையமாகக் கொண்டிருந்தாலும், இந்த நடவடிக்கை இரு வல்லரசு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆழமான அவநம்பிக்கையைக் காட்டுவதாகப் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க பேராளர்களின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து பெய்ஜிங் தரப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.



