
கோலாலம்பூர், நவம்பர்-7, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி தோல்வி கண்டிருப்பது, பக்காத்தான் ஹாராப்பான் (PH) கூட்டணிக்கும் நல்லதொரு பாடமாக இருக்க வேண்டுமென, பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரிம் கூறியுள்ளார்.
Ultra-Malay என்றழைக்கப்படும் தீவிர மலாய்க்காரர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதை PH தவிர்க்க வேண்டும்.
மாறாக, ஒன்றுபட்ட மலேசியச் சமுதாயகத்தை உருவாக்குவதில் ஆளுங்கட்சி கவனம் செலுத்த வேண்டும்.
அதை விடுத்து, பாஸ், அம்னோ, பெர்சாத்து போன்ற கட்சிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு, மலாக்காரர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக காட்டிக் கொள்ள PH முயலக் கூடாது என, அந்த பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டார்.
PH-ன் பலமே பல்லினக் கட்சி என்பது தான்; எனவே அந்த அடையாளம் கட்டிக் காக்கப்பட வேண்டும்.
மலாய்க்காரர்கள், மலாய்க்காரர் அல்லாதோர், சபா-சரவாக் பூமிபுத்ராக்கள், பூர்வக்குடியினர் என அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கட்சியாக PH நிலைத்திட வேண்டுமென்றார் அவர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரங்களின் போது, குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்களைக் கவருவதற்காக ஜனநாயகக் கட்சியினர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
அதே போல் மலாய்க்காரர்களின் வாக்குகளைக் குறி வைத்து, பக்காத்தானும் இங்கு நேரத்தை வீணடிக்கக் கூடாது என ஹசான் கரிம் கேட்டுக் கொண்டார்.
நேற்றைய அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ், வலச்சாரி குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டோடனல்ட் ட்ரம்ப்பிடம் தோல்வியுற்றார்.