பாசீர் கூடாங், நவம்பர் 21 –200 மாணவர்கள், 150 ஆசிரியர்கள் என கடந்த நவம்பர் 18ஆம் திகதி திங்கட்கிழமை, பாசீர் கூடாங் மாவட்ட முத்தமிழ் விழா, மாசாய் தமிழ்ப்பள்ளியில் மிக விமரிசையாக நடைபெற்றது.
பாசீர் கூடாங் மாவட்டத் தலைமையாசிரியர் மன்ற ஏற்பாட்டில் 30ஆம் ஆண்டாக நடைபெற்ற இவ்விழாவில் பாசீர் கூடாங் மாவட்டத்தைச் சேர்ந்த பத்து தமிழ்ப்பள்ளி மாணவர்கள் களமிறங்கி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இவ்வருட முத்தமிழ் விழாவில் குழு மற்றும் தனிநபர் போட்டிகளாக, நன்னெறிக் கதை கூறும் போட்டி, இசைப்பாடல், தனித்திறன் போட்டி, தன்முனைப்புப் பாடல், கட்டுரை எழுதும்போட்டி, அரிசி மாவு கோலப்போட்டி, நாடகப் போட்டி, நடனம் ஆகிய போட்டிகள் இடம்பெற்றன.
இதில் தனிநபர் போட்டிக்கான சுழற்கிண்ணத்தைத் மவுண்ட் ஆஸ்தின் தோட்டத் தமிழ்ப்பள்ளியும், குழு போட்டிக்கான சுழற்கிண்ணத்தை பெர்மாஸ் ஜெயா தமிழ்ப்பள்ளியும் கைப்பற்றின.
வெற்றிப் பெற்ற பள்ளிகள் மாவட்டத்தைப் பிரதிநிதித்து நவம்பர் 23ஆம் திகதி ஜோகூர் மாநில அளவிலான முத்தமிழ் விழாவில் களமிறங்கவுள்ளனர்.