
ஜோகூர் பாரு, ஜூலை-7 – ஜோகூர் பாரு மாநகர் மற்றும் தெப்ராவில் வரும் ஜூலை 15 முதல் 26 மணி நேரங்களுக்கு அட்டவணையிடப்பட்ட தண்ணீர் விநியோகத் தடை ஏற்படவிருக்கின்றது.
ஜூலை 15 காலை 9 மணி தொடக்கம் மறுநாள் காலை 11 மணி வரை அத்தடை நீடிக்கும்.
இதனால் 33,000 கணக்குகள் பாதிக்கப்படுமென, Ranhill SAJ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாசீர் கூடாங், சுல்தான் இஸ்கண்டார் நீர் சுத்திகரிப்பு ஆலையில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதே அதற்குக் காரணமாகும்.
நீர் சுத்திகரிப்பு முறையின் நிலைத்தன்மையை உறுதிச் செய்யவும், நீண்ட காலத்திற்கு தண்ணீர் விநியோகம் தொடர்ந்து கிடைக்கவும் அப்பணிகள் முக்கியமென அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி அனுவார் அப்துல் கானி கூறினார்.
இந்த தண்ணீர் விநியோகம் தடைப்படும் காலம் நெடுகிலும் போதிய அளவில் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்வதோடு, சிக்கனமாக பயன்படுத்துமாறும் வட்டார மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
மருத்துவமனைகள், சிறுநீரக சுத்திகரிப்பு மையங்கள் போன்ற அவசியத் தேவை உள்ள இடங்களுக்கு டாங்கிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுமென்றார் அவர்.