ஜோகூர் பாரு, டிச 11 – ஜோகூர் மாநில ரோகாயா அறநிறுவனத்தின் தலைவர்
SAC டத்தோ சுகுமாறன் இராமன் தலைமையில் ரினி தோட்ட தமிழ்ப் பள்ளி மாணவர்களின் சீருடை இயக்க முகாம் அண்மையில் மலேசிய தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் 97 மாணவர்கள் கலந்துகொண்டு பல்வேறு அனுபவங்களை பெற்றதோடு அவர்களைது திடத்தையும் மன உறுதியையும் சுகுமாறன் பாராட்டியதோடு இதுபோன்ற நடவடிக்கைகள் மாணவர்களுக்கு நல்லதொரு அனுபவத்தையும் எதிர்கால சவால்களை எதிர்நோக்குவதற்கு அவர்களை தயார்படுத்துவதாகவும் கூறினார். இருதினங்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை இஸ்கந்தர் புத்ரி மாவட்ட மன்ற உறுப்பினர் சங்கர பாண்டியன் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வின் கலந்துகொண்டதன் மூலம் மாணவர்கள் கட்டொழுங்குமிக்கவர்களாகவும் பல்வேறு சூழல்களை எதிர்நோக்கும்போது அதன் சவால்களையும் வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
சிறந்த பயிற்றுநர்களால் சிறப்பாக நடத்தப்பட்ட இந்த முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. சீருடை இயக்கங்களின் நடவடிக்கைகள் பற்றிய ஆழ்ந்த அனுபவங்களை மாணவர்களுக்கு ஜொகூர் மாநில கல்வி இலாகாவின் பாலர்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளிகளின் உதவிஇயக்குநர் இரவிச்சந்திரன் இராமச்சந்திரன் தெரிவித்தார். கல்விக் கொள்கைக்கேற்ப கல்வி மட்டுமின்றி புறப்பாட நடவடிக்கைகளிலும் மாணவர்களை மிளிரச் செய்வது கல்விக்கூடங்களின் தலையாய கடமையாக இருக்க வேண்டும் என ரினி தோட்ட தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.சு.தமிழ்ச்செல்வி கேட்டுக்கொண்டார். இந்நிறைவு விழாவில் டத்தின் அனித்தா தேவி, ஜோகூர் மாநில ரோகாயாஅறவாரியத்தின் நிர்வாக உறுப்பினர்கள் அன்பழகன் நாராயணன் , அர்விந்திரன் , பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களும் திரளாக கலந்துகொண்டனர்.