
சுங்கை பூலோ, மார்ச்-16 – SKM எனப்படும் மலேசியக் கூட்டுறவு ஆணையம் வாயிலாக தொழில்முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சு, 50 விழுக்காடு வரையிலான கழிவு விலையில் மடானி ராயா மலிவு பெருவிற்பனையை நடத்துகிறது.
நோன்புப் பெருநாளை ஒட்டிய இந்த மலிவு விற்பனை, நேற்று தொடங்கி 2 நாட்களுக்கு சிலாங்கூர் சுங்கை பூலோ, சவ்ஜானா உத்தாமா MPKS மண்டபத்தில் நடைபெறுகிறது.
இதில் ஹரி ராயாவுக்குத் தேவையான அரிசி, சமையல் எண்ணெய், கோழி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் என ஏராளமான அத்தியாவசியப் பொருட்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்.
வட்டார மக்களின் பெருநாள் சுமையைக் குறைக்கும் நோக்கில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரின் மக்கள் சேவை மையத்தின் ஒத்துழைப்போடு இந்த மலிவு விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவின உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலையறிந்து, அவர்கள் பயன்பெறும் வகையில் இந்த மலிவு விற்பனை நடைபெறுவதாக, துணையமைச்சரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
அதே சமயம் கூட்டுறவு மற்றும் தொழில்முனைவோரின் வியாபாரங்களை வலுப்படுத்தும் நோக்கிலும் இந்நிகழ்வு நடைபெறுவதாக அவர் சொன்னார்.
50 விழுக்காட்டு விலைக் கழிவில் 30 விழுக்காட்டுக்கான செலவை கடந்தாண்டை போலவே இவ்வாண்டும் டத்தோ ஸ்ரீ ரமணனே ஏற்றுக் கொண்டார்.
விற்பனை தொடக்க விழாவின் போது, வசதி குறைந்த வட்டார மக்களுக்கு துணையமைச்சர் உணவுக் கூடைகளையும் அன்பளிப்பாக வழங்கினார்.
அதோடு, சிலாங்கூரைச் சேர்ந்த 4 கூட்டுறவுக் கழகங்களுக்கு 4.01 மில்லியன் ரிங்கிட் சுழல் உதவி நிதியையும் அவர் வழங்கினார்.