![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/12/MixCollage-20-Dec-2024-08-03-PM-149.jpg)
கோலாலம்பூர், டிசம்பர்-20 – இளம் தலைமுறையைப் பாதிக்கக் கூடிய உள்ளடக்கங்கள் டிக் டோக்கில் பரவலாகி வருவதால், அரசாங்கம் கடும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
இல்லையென்றால் எதிர்கால சந்ததியினர் கெட்டு சீரழிவர் என, செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் எச்சரித்துள்ளார்.
2022 முதல் இவ்வாண்டு டிசம்பர் வரை நாட்டில் 3,571 ஆபாச இணையத் தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
அதே சமயம் 1,947 ஆபாசப் பதிவுகள் சமூக ஊடகங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 70 விழுக்காட்டுக்கும் மேல் சிறார் பாலியல் அம்சங்களை உட்படுத்தியவை.
இதன் மூலம், அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் இப்பிரச்னைக்குத் தீர்வுக் காண போதுமானதாக இல்லை என தெரியவருகிறது.
எனவே, டிக் டோக் விஷயத்தில் அரசாங்கம் கடும் போக்கைக் கடைபிடிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
டிக் டோக் நமது குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக இருப்பதை அதன் சேவை வழங்குநர் உறுதிச் செய்வதில் தோல்வி கண்டால், 16 வயதுக்குக் கீழ்பட்டவர்களுக்கு டிக் டோக் பயன்பாட்டை அரசாங்கம் தடை செய்ய வேண்டும்.
அப்படியும் இப்பிரச்னைத் தீரவில்லை என்றால், கடைசி முயற்சியாக டிக் டோக்கை இந்நாட்டில் முழுமையாகத் தடைச் செய்ய வேண்டும் என டத்தோ சிவராஜ் கேட்டுக் கொண்டார்.
இந்நாட்டுக் கலாச்சாரச் சூழலை மதிக்காத சமூக ஊடகங்களிடம் நாம் ஏன் மண்டியிட வேண்டும் என்றார் அவர்.
நம் பிள்ளைகளைப் பாதுகாப்பது நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்குச் சமம் என அவர் சொன்னார்.