
கோலாலம்பூர், ஜனவரி-28-3 இந்திய ஆடவர்கள் பலியான மலாக்கா, டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டு வழக்கில், விசாரணை அதிகாரிகள் தடயவியல் அறிக்கைக்காக இன்னும் காத்திருக்கின்றனர்.
விசாரணை அறிக்கைகள் ஏற்கனவே 2 முறை சட்டத் துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டன.
என்றாலும், சட்டத் துறைத் தலைவரின் உத்தரவின் பேரில்
அச்சம்பவம் தற்போது மேல் விசாரணையில் இருப்பதாகவும், உரிய தொழில்நுட்ப அறிக்கைகள் கிடைத்ததும் விசாரணை அறிக்கை முழுமைப் பெறுமென்றும், உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதையும், அமுலாக்க நிறுவனங்கள் மீதான பொது மக்களின் நம்பிக்கை நிலைநிறுத்தப்படுவதையும் உறுதிச் செய்ய, விசாரணை வெளிப்படையாக நடைபெறும் என, மக்களவையில் அவர் சொன்னார்.
நவம்பர் 24 ஆம் தேதி, எம். புஷ்பநாதன், டி. புவனேஸ்வரன், ஜி. லோகேஸ்வரன் ஆகியோர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆரம்பத்தில், அவர்கள் கொள்ளையர்கள் என்றும், போலீஸாரை பாராங் கத்தியால் தாக்கியதாகவும் கூறப்பட்டது.
ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களோ, அம்மூவரும் திட்டமிட்டே கொல்லப்பட்டதற்கான சான்றுகள் மற்றும் ஆடியோ குரல் பதிவு இருப்பதாகக் கூறி முறையிட்டன.
இதையடுத்து, அச்சம்பவம் ‘கொலை’ என வகைப்படுத்தப்பட்டது.
முன்னதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், விசாரணை வெளிப்படையாக நடைபெற வேண்டும் எனவும், முழு அறிக்கை உள்துறை அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.



