Latestமலேசியா

தகவலறிந்த சமூகத்திற்கான WSIS+20 மாநாடு; மலேசியக் குழுவுக்குத் தலைமையேற்கும் ஃபாஹ்மி

ஜெனிவா, ஜூலை-8 – சுவிட்சர்லாந்து, ஜெனிவாவில் இன்று தொடங்கி ஜூலை 11 வரை நடைபெறவிருக்கும் தகவலறிந்த சமூகத்திற்கான WSIS+20 உச்ச நிலை மாநாட்டில், மலேசியப் பேராளர் குழுவுக்கு, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் தலைமையேற்கிறார்.

WSIS என்பது நிலையான வளர்ச்சிக்காக ICT-யைப் பயன்படுத்த உலகத் தலைவர்களை ஒன்றிணைக்கும் ஐநா சபையின் ஒரு தளமாகும்.

உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு, இணையப் பாதுகாப்பு போன்ற 11 ICT அம்சங்களில் இது கவனம் செலுத்துகிறது.

இம்மாநாடு நெடுகிலும் பிரிட்டன், சவூதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தகவல்-தொடர்பு அமைச்சர்களுடன் 10-க்கும் மேற்பட்ட கூட்டங்களிலும் ஃபாஹ்மி பங்கேற்கிறார்.

ITU எனப்படும் அனைத்துலக தொலைத்தொடர்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் Doreen Bogdan Martin-னுடனான சந்திப்புக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு ஏற்க, அனைவரையும் உள்ளடக்கிய, நாட்டின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த மடானி அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளில், இதுவும் ஒரு பகுதியாகும்.

இந்த பங்கேற்பு, மலேசியாவுக்கு பல்வேறு வியூக நன்மைகளைக் கொண்டு வருவதாக தொடர்புத் துறை அமைச்சு அறிக்கை வாயிலாகக் கூறியது.

தவிர, கிராமப்புற இணையத் தொடர்பை விரிவுபடுத்துவது, தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் உள்ளடக்கம், மக்களின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப கல்வியறிவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றில் மலேசியாவின் தலைமைக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைப்பதையும் அமைச்சு சுட்டிக் காட்டியது.

JENDELA எனப்படும் தேசிய டிஜிட்டல் இணைப்புத் திட்டம், NADI எனப்படும் தேசிய தகவல் பரவல் மையம் போன்ற முக்கிய முயற்சிகளை அறிமுகப்படுத்தவும், மலேசியா WSIS மாநாட்டை ஒரு களமாகப் பயன்படுத்துகிறது .

இதன் வழி தகவல் தொடர்பு தொழில்நுட்ப மாற்றத்தில் வட்டாரத் தலைவராக மலேசியா தனது நிலையை வலுப்படுத்துகிறது என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!