
கோலாலம்பூர், ஜூலை-5 – STR ரொக்க உதவியைப் பெறுபவர்கள், மலேசியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சைக்கும் தகுதியுடையவர்கள் என்பது இன்னும் பலருக்குத் தெரியாது.
குறைந்த வருமானம் பெறுவோருக்கும் சிறந்த சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதற்காக, மடானி மருத்துவத் திட்டம் என்று அழைக்கப்படும் இந்த முயற்சி 2023 ஜூன் 15 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மடானி மருத்துவத் திட்டத்தின் கீழ், தகுதிப் பெற்ற STR பெறுநர்கள் இப்போது ProtectHealth Corporation Sdn Bhd-டின் கீழ் பதிவுச்செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
ProtectHealth தனியார் மருத்துவமனைகள் நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் அமைந்துள்ளன.
அவை முறையே கோலாலம்பூர், சிலாங்கூரில் கோம்பாக், உலு லங்காட், பெட்டாலிங் மற்றும் கிள்ளான்; ஜோகூர் பாரு; பேராக்கில் கிந்தா, பினாங்கில் தீமோர் லாவோட்; சபாவில் கோத்தா கினாபாலு, சரவாக்கில் கூச்சிங் ஆகும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் RM250, ஒற்றை மூத்த குடிமக்களுக்கு RM125 மற்றும் ஒற்றை STR பெறுநர்களுக்கு RM75 என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ProtectHealth கூறியது.
STR பெறுநர்கள் இந்தத் திட்டத்திற்கான தங்கள் தகுதியைச் சரிபார்த்து, அருகிலுள்ள மருத்துவமனைகள் குறித்த தகவல்களை www.protecthealth.com.my/skimperubatanmadani இணைய அகப்பக்கத்தில் காணலாம்.