
செப்பாங், ஜூலை-16- பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்தி மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய 141 வெளிநாட்டவர்கள் மேற்கொண்ட முயற்சி, KLIA 2 விமான முனையத்தில் முறியடிக்கப்பட்டது.
அவர்களில் 94 பேர் இந்தியப் பிரஜைகள், 41 இந்தோனேசியர்கள், மூவர் இலங்கை நாட்டவர்கள், 3 பேர் பாகிஸ்தானியர்கள் ஆவர்.
சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை AKPS எனப்படும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் மேற்கொண்ட கண்காணிப்பில் அவர்கள் சிக்கினர்.
மூன்றாம் நாட்டுக்கான பயணிகள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக, டிக்கெட்டை முன்பதிவு செய்துகொண்டு, ஆனால் அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு கடைசியில் இங்கேயே இருந்துகொள்வதே அவர்களின் முக்கிய யுக்தியாக உள்ளது.
பெரும்பாலோர், சுகாதாரப் பிரச்னை, டிக்கெட் காணாமல் போய்விட்டது, பயணப் பெட்டி பிரச்னை போன்ற பொய்க் காரணங்களைக் கூறி transit புறப்பாடு மண்டபத்திலிருந்து வெளியேற முயலுகின்றனர்.
இன்னும் சிலர், சிறப்புப் பயண அட்டைக்கு விண்ணப்பித்து விட்டு, கடைசியில் அனுமதிக்கப்பட்ட காலத்தை விட நீண்ட காலம் இங்கேயே தங்கி விடுவதை AKPS சுட்டிக் காட்டியது.
நுழைவு மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட அந்த 141 பேரும், அடுத்தடுத்த விமானங்களில் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.