
பெந்தோங், நவம்பர்-13, கெந்திங் மலேசியா, தனது தனியார் சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்நடவடிக்கை, சாலை பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்டவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்படுவதாக அந்த உல்லாசத் தளம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
24 கிலோ மீட்டர் நீள தனியார் சாலையைப் பராமரிப்பதற்கான செலவுகளை 1960-களில் இருந்து கெந்திங் நிறுவனமே முழுக்க முழுக்க ஏற்று செலுத்தி வருகிறது.
தற்போது கணிசமாக அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக கட்டண விதிப்பு அவசியம் என அது விளக்கியது.
கட்டண விவரங்கள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
என்றாலும், சாலை தனியார் சொத்து என்பதால் பராமரிப்பு செலவுகள் அவசியம் என வலியுறுத்துகிறது.
“தனியார் நிலத்தில், தனியார் சாலையில், தனியாரின் முன்னெடுப்பே இக்கட்டண விதிப்பாகும்” என அது குறிப்பிட்டது.
பொது மக்களின் கருத்து வேறாக இருந்தாலும், சாலை பாதுகாப்புக்கும் வசதிக்கும் முன்னுரிமைத் தரப்பட வேண்டியது அவசியம் என கெந்திங் கூறுகிறது.



