Latestசினிமா

தனிப்பட்ட வெறுப்பால் தனுஷ் என்னைப் பழிவாங்குகிறார்; நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா சரமாரி குற்றச்சாட்டு

சென்னை, நவம்பர்-17 – தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, தனது திருமண ஆவணப் படம் தொடர்பான சர்ச்சையில் நடிகர் தனுஷை கடுமையாகத் தாக்கி அறிக்கை வெளியிட்டிருப்பது, திரையுலகிலும் இரசிகர்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் தயாரித்து நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தின் வீடியோ காட்சியை ஆவணப்படத்தில் பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியதே நயன்தாராவின் இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணமாகும்.

Nelflix-சில் ஒளிபரப்புவதற்காக எடுக்கப்பட்ட Nayanthara: Beyond The Fairy Tale என்ற அந்த ஆவணப்படம் இதுவரை வெளிவராமல் போனதற்கே தனுஷும் அவரின் பழிவாங்கும் குணமுமே காரணம் என நயன்தாரா நேரடியாகத் தாக்கினார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனுடனான தனது காதல் வாழ்க்கையின் முக்கியத் தருணங்கள் அடங்கிய ‘நானும் ரவுடிதான்’ படத்தின் பாடலை ஆவணப் படத்தில் பயன்படுத்த, தனுஷிடம் அனுமதி கேட்டு 2 ஆண்டுகளாக காத்திருந்ததாகவும், அதற்கு இதுவரை அவர் அனுமதி வழங்கவில்லை என்றும் அந்த 3 பக்க அறிக்கையில் நயன்தாரா சொன்னார்.

இந்நிலையில், அப்படத்தின் பாடல் இல்லாமல், படப்பிடிப்பின் போது தனிப்பட்ட முறையில் நாங்கள் எடுத்த 3 வினாடி வீடியோவைத் தான் எங்களின் திருமண ஆவணப் படத்தில் பயன்படுத்தியுள்ளோம்.

அதற்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்பது உங்களின் உண்மை குணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது என நயன்தாரா சாடினார்.

வியாபார ரீதியாக இருந்தாலும், தனிப்பட்ட பகையை மனதில் வைத்தே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது;

இதுவொரு கீழ்தரமான செயல்; மேடைகளில் உங்களின் அப்பாவி இரசிகர்கள் முன் பேசுவதைப் போல், 1 சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும் என் கணவரும் அறிவோம் என நயன்தாராவின் அறிக்கை அனல் பறக்கிறது.

போகிற போக்கில், தந்தை மற்றும் அண்ணனின் தயவில் மேலே வந்தவர் என்றும், அவர் தனுஷை மறைமுகமாக சாடியுள்ளார்.

முடிக்கும் போது ‘அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்பவர்’ என்ற அர்த்தத்தை கொண்ட schadenfreude எனும் ஜெர்மனிய வார்த்தையையும் தனுஷுக்கு நயன் சமர்ப்பித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாளை நவம்பர் 18-ஆம் தேதி நயன்தாராவின் திருமண ஆவணப் படம் Nelfix-சில் வெளிவரும் நிலையில், இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் தரப்பிலிருந்தும் சூடான பதிலடி வரலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில், இரு பெரும் முன்னணி நட்சத்திரங்களுக்கு இடையே பொது வெளியில் வெடித்துள்ள பிரச்னையால் சமூக வலைத்தளமே கலவரமடைந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!