கம்போங் பாண்டான் கோயிலுக்கு வெளியே வழிப்பறிக் கொள்ளையர்களைத் தடுக்க முயன்ற ஆடவர் காயம்

கோலாலம்பூர், ஏப்ரல்-29, கோலாலம்பூர், கம்போங் பாண்டான் ஸ்ரீ சுந்தர கணேசர் ஆலயத்திற்கு வெளியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆடவர்கள், ஒரு மூதாட்டியின் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடினர்.
லோரோங் லீமா சாலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவம், CCTV கேமராவில் பதிவாகி வைரலாகியுள்ளது.
60 வயது அம்மூதாட்டி காரினுள் ஏறும் சமயத்தில், கொள்ளையர்கள் சங்கிலியைப் பறித்தனர்.
உறவினர்கள் உட்பட அங்கிருந்த சிலர் கொள்ளையன்களை நிறுத்த முயன்று தோல்வி கண்டனர்.
அதில், அம்மாதுவின் சகோதரர் காயமடைந்தார்.
பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு காயமேதும் ஏற்படவில்லை; இருந்தாலும் அச்சம்பவத்தால் அவர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்நிலையில் போலீஸ் புகார் பெறப்பட்டிருப்பதை, வங்சா மாஜு போலீஸ் துணைத் தலைவர் ஷாருல் அனுவார் அப்துல் வஹாப் உறுதிப்படுத்தினார்.
இதையடுத்து ஆலயத்திடமிருந்து CCTV கேமரா பதிவுகளைப் பெற்று அவ்விரு வழிப்பறிக் கொள்ளையன்களையும் தேடும் முயற்சியில் போலீஸ் இறங்கியுள்ளது