
கோலாலம்பூர், மார்ச்- 4 – தாமான் மிடா எம்ஆர்டி நிலையத்தில் உயரமான இடத்திலிருந்து கீழே குதிக்க முயன்றதாக நம்பப்படும் கம்போடிய ஆடவர் ஒருவர் தீயணைப்புப் படையினரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டார்.
நேற்று மாலை மணி 3.45 அளவில் கீழே குதிக்க முயன்ற அந்த ஆடவரின் முயற்சி தொடர்பாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் மேற்கொண்ட துரித நடவடிக்கையினால் அந்த நபர் காப்பாற்றப்பட்டார்.
பண்டார் துன் ரசாக் தீயணைப்பு நிலையத்தின் உதவியோடு ஜாலான் ஹங்துவா தீயணைப்பு நிலையத்தின் தீயணைப்பு குழுவினர் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அந்த ஆடவர் எம்.ஆர்.டி நிலையத்தின் மேற்பகுதியிலுள்ள நடக்கும் இடத்திலிருந்து கீழே விழுவதற்கு நின்று கொண்டிருந்தபோது தீயணைப்பு வீரர்கள் அவரிடம் விவேகமாக பேசி தற்கொலை முயற்சியை கைவிடும்படி வலியுறுத்துவதில் வெற்றி பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து அந்த ஆடவர் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.



