கோலாலம்பூர், நவ 26 – தனது தாயை கொலை செய்ததாக ஆடவர் ஒருவருக்கு எதிராக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று காலை குற்றஞ்சாட்டப்பட்டது.
சக்கர வண்டியில் நீதிமன்றத்திற்கு வந்திருந்த 53 வயதுடைய என். டினேஸ்ஸிற்கு ( N. Deanesh ) எதிராக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக அவர் தலையசைத்தார்.
எனினும் அவரிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதிக்கும் மார்ச் 26ஆம் தேதிக்குமிடையே டினேஸ் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றப்பத்திரிகையில் வாசிக்கப்பட்டது.
ஜாலான் கிள்ளான் லாமாவில் தாமான் OUG யிலுள்ள தனது வீட்டில் அவர் குற்றத்தை புரிந்ததாக தண்டனைச் சட்டத்தின் 302 ஆவது விதியின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் 30 ஆண்டுகளுக்கும் குறைவாக மற்றும் 40 ஆண்களுக்கும் மேற்போகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பதோடு 12 க்கும் குறையாத பிரம்படிகளும் வழங்கப்படலாம்.
சவப் பரிசோதனை, மருத்துவ மற்றும் மரபணு அறிக்கைக்காக இந்த வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 12 ஆம் தேதி அவசர பிரிவுக்கு அழைத்த ஆடவர் ஒருவர் வீட்டில் இருந்துவரும் தனக்கு உடல் நல பிரச்னை இருப்பதோடு மூன்று ஆண்டுகளுக்க முன் தனது தயாரை வீட்டில் கொலை செய்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.
தனது தாயாரின் சடலம் வைக்கப்பட்டிருந்த குளிர்பதனப் பெட்டிக்கு அருகே அந்த ஆடவர் உட்கார்ந்திருந்ததை அவ்வீட்டிற்கு வந்த போலீஸ் மற்றும் மருத்துவ அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர்.