
கோலாலம்பூர், ஏப்ரல் 7 – கடந்த வாரம் புத்ரா ஹைட்ஸ், சுபாங் ஜெயாவில் எரிவாயு குழாய் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து தீபகற்பத்தின் மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களில் உள்ள பல பகுதிகளில் எரிவாயு விநியோகம் தடைபட்டது. மத்திய மண்டலத்தில் உள்ள ஷா ஆலம், கிளாங், செர்டாங், பூச்சோங், பத்து தீகா, மற்றும் காப்பார் உள்ளிட்ட சில பயனீட்டாளர்கள் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை அந்தந்த விநியோகிப்பாளர்களிடமிருந்து கட்டுப்பாட்டு அறிவிப்புகளைப் பெறத் தொடங்கியதாக எரிசக்தி ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க் கிழமை காலை 8.10 மணியளவில் பெட்ரோனாஸ் எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட தீ விபத்தால், 30 மீட்டருக்கும் அதிக உயரத்திற்கு தீ உயர்ந்து அதன் வெப்ப நிலை 1,000 டிகிரி செல்சியஸை எட்டியது மற்றும் அந்த தீயை அணைக்க கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் பிடித்தது. நேற்றைய நிலவரப்படி, தற்காலிக வெளியேற்றும் மையத்தில் மொத்தம் 509 குடும்பங்கள் பதிவு செய்துள்ளன. நோன்பு பெருநாளின் இரண்டாவது நாளில் ஏற்பட்ட அந்த சம்பவத்தின்போது குடியிருப்புவாசிகளில் சிலர் வெளியூரில் இருந்ததால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.