Latestமலேசியா

துன் டாய்முக்குச் சொந்தமான 3 பில்லியன் ரிங்கிட் சொத்துக்கள் பறிமுதல் & உரிமை முடக்கம்; அதிரடி காட்டும் MACC

புத்ராஜெயா, ஜூலை-12 – மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் சைனுடின், அவரின் மனைவி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பினாமிகளுக்குச் சொந்தமான 3 பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேலான சொத்துக்களை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC பறிமுதல் செய்து உரிமையை முடக்குவதில் முனைப்புக் காட்டி வருகிறது.

பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, இந்தோனேசியா, ஜப்பான், இத்தாலி, கேய்மன் தீவு உள்ளிட்ட 11 நாடுகளில் அந்த அசாதாரண சொத்துக்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக, MACC அறிக்கையொன்றில் கூறியது.

பிரிட்டனின் தேசியக் குற்றத் தடுப்பு ஆணையம், மற்றும் அனைத்துலக ஊழல் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒத்துழைப்பின் வாயிலாக இது சாத்திமாகியுள்ளது.

இதற்கு முன் 758 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் பிரிட்டனில் டாய்மின் 7 அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தவிர,கேய்மன் தீவில் 1.15 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 4 வங்கிக் கணக்குகளும் முதலீடுகளும், சிங்கப்பூரில் 540 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 12 வங்கிக் கணக்குகளும் முதலீடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவின் வாயிலாக அமுலாக்க நடவடிக்கைகள் முறைப்படி மேற்கொள்ளப்படுவதை உறுதிச் செய்யும் பணிகள் தற்போது நடைபெறுகின்றன.

உள்நாட்டில் பார்த்தால், டாய்ம் குடும்பத்துக்குச் சொந்தமான Menara Ilham கோபுரம் கடந்த மாதம் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டாய்ம் காலமான போதும், முறையாக அறிவிக்கப்படாத அவரின் சொத்துக்கள் மீதான விசாரணைத் தொடரும் என ஏற்கனவே அறிவித்திருந்த MACC, தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!