
வியன்தியேன், நவம்பர்-5,
தென்கிழக்காசிய நாடான லாவோசில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில், சுற்றுலா வந்திருந்த அமெரிக்க தந்தையும் மகனும் இராட்சத ஆசிய தேனீக்களின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தனர்.
47 வயதான Daniel Owen, அவரது 15 வயது மகன் Cooper இருவரும் அக்டோபர் 15-ஆம் தேதி அங்குள்ள கேளிக்கை காட்டுப் பகுதிக்குச் சென்ற போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
ஓர் உயரமான இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கேபிள் கம்பி வடத்தில் கயிற்று இணைப்புகளுடன் கட்டப்பட்டு பறக்கும் சாகச விளையாட்டான Zipline-னில் ஈடுபட்ட போது, திடீரென தேனீக்கள் தாக்கின.
இருவரையுமே தலா 100 தடவைகளுக்கும் மேலாக அந்த இராட்சத தேனீக்கள் ‘பதம்’ பார்த்தன.
காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவரும், சிகிச்சைப் பலனளிக்காது உயிரிழந்தனர்.
லாவோஸில் தேனீக்கள் கொட்டியதால் உயிரிழப்புகள் ஏற்படுவது மிகவும் அபூர்வம் என்ற நிலையில், இச்சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிர் பலிக்காக வருத்தம் தெரிவித்த காட்டுப் பூங்கா நிர்வாகம், இது “முன்கூட்டியே கணிக்க முடியாத துயரமான நிகழ்வு” என குறிப்பிட்டது.
இராட்சத தேனீக்கள் தங்கள் கூடு அச்சுறுத்தப்படும் போது கூட்டாக தாக்கக்கூடும் என்பதால், வெப்பமண்டல காட்டுப்பகுதிகளில் பயணம் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.



