கோத்தா பாரு, நவ 4 – தென் தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட டிக்கிர் பாராட் ( Dikir Barat ) பெண் பாடகி உட்பட ஆறு மலேசியர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. மூன்று பெண்கள் உட்பட ஆறு தனிப்பட்ட நபர்கள் மீது போலீஸ் விசாரணையை நடத்தும் பொருட்டு அவர்களை தடுத்து வைக்கும் உத்தரவை பெறுவதற்காக இன்று நரதிவாட் ( Narathiwat ) நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவர் என தாய்லாந்து போலீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சுமார் 6,000 பரவச மாத்திரைகளை வைத்திருந்தது தொடர்ப்பாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது. தாய்லாந்தில் சுங்கை கோலோக்கிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பரவச மாத்திரைகளுடன் பெண் கலைஞர் உட்பட ஆறு மலேசிய பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. 25 மற்றும் 32 வயதுடைய அவர்கள் அனைவரும் தங்களது இசை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மலேசிய நேரப்படி காலை ஆறு மணியளவில் ஹோட்டல் அறைக்கு திரும்பிய பின் கைது செய்யப்பட்டனர். கைதான மூன்று பெண்கள் மற்றும் மூன்று ஆடவர்களிடம் 6,000 பரவச மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.