கோலாலம்பூர், நவம்பர்-24, தெரு நாய்களுக்கு உணவளித்ததால் சமூக ஊடகங்களில் தன் மீது பலர் வெறுப்பைக் கக்குவதாக, உணவக நடத்துநரான முஸ்லீம் மாது ஒருவர் ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளார்.
என் உணவகத்தைப் புறக்கணிக்கப் போவதாக மிரட்டும் அளவுக்கு, வாயில்லா ஜீவன்களுக்கு நான் உணவளிப்பது கொலைக்குற்றமா? என டிக் டோக்கில் வெளியிட்ட வீடியோவில் அவர் கேட்கிறார்.
மதத்தின் பெயரைப் பயன்படுத்தி குறை சொல்கின்றனர்; ஆனால்
அனைத்து ஜீவராசிகளும் கடவுளின் படைப்பே என்பதை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர்.
இயற்கையாகவே தாம் ஒரு பிராணிகள் விரும்பி எனக் குறிப்பிட்ட அப்பெண், வீட்டில் மட்டுமே 50 பூனைகளை வளர்த்து வருகிறார்.
உணவகத்தில் மிச்சமாகும் உணவுகளை பசியில் வாடும் தெரு நாய்களுக்கு வழங்குகிறார்.
பிராணிகளுக்கு உணவளிக்கும் போது அவற்றுடன் கொஞ்சி மகிழ்வது மனதுக்கு ஆறுதலைத் தருகிறது.
அவற்றை வீடியோ எடுப்பது விளம்பரம் தேடுவதற்கும் அல்ல.
எனவே, இது போன்ற அற்பக் காரணங்களைக் கூறி புறக்கணிப்பு என்ற பெயரில் என் வியாபாரத்தைக் கெடுத்து விடாதீர்கள் என Salai Star உணவகத்தின் உரிமையாளருமான அவர் கேட்டுக் கொண்டார்.
நல்லுள்ளம் கொண்ட அம்மாதுவை சிலர் குறை கூறினாலும் பலர் அவரை பாராட்டவே செய்கின்றனர்.
குறைகளை கண்டுகொள்ளாதீர்; உங்கள் உணவகம் எங்கே என்று சொல்லுங்கள், நாங்கள் அடிக்கடி வந்துசெல்கிறோம் என வலைத்தளவாசிகள் அவருக்கு ஊக்கமூட்டுகின்றனர்.