
செலாயாங், ஜூலை-13- சரிவிலிருந்து சீரடையும் தருணத்தில், தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகுவதாக மிரட்டக் கூடாது என அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி நினைவுறுத்தியுள்ளார்.
இந்த இக்கட்டான காலத்தில் தனது பங்காளிகளான ம.சீ.ச, ம.இ.கா மற்றும் பி.பி.ஆர்.எஸ் கட்சிகளை அம்னோ ஒருபோதும் புறக்கணிக்காது; மாறாக அவர்களை வலுப்படுத்த தொடர்ந்து கை கொடுக்கும் என, தேசிய முன்னணி தலைவருமான அவர் சொன்னார்.
செலாயாங் அம்னோ தொகுதி கூட்டத்தைத் தொடக்கி வைத்து பேசுகையில் துணைப் பிரதமருமான சாஹிட் அவ்வாறு பேசினார்.எனினும் எந்த உறுப்புக் கட்சி அவ்வாறு மிரட்டியதாக சாஹிட் தெரிவிக்கவில்லை.என்றாலும், அது ம.சீ.ச தான் என்பதை நம்மால் யூகிக்காமல் இருக்க முடியவில்லை.
காரணம், பாரிசானிலிருந்து விலகி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலும் இணையாமல் சுயேட்சை எதிர்கட்சியாக ம.சீ.ச செயல்பட வேண்டுமென, அதன் தொகுதித் தலைவர் ஒருவர் கடந்த மாதம் வலியுறுத்தியிருந்தார்.
அது குறித்து கருத்துரைத்த ம.சீ.ச தலைவர் டத்தோ ஸ்ரீ Dr வீ கா சியோங் கூட, அக்கட்சி தேசிய முன்னணியில் நீடிக்குமா இல்லையா என்பது ஆண்டு பொதுப்பேரவையில் முடிவு செய்யப்படும் என கூறியிருந்தார்.