
கோலாலம்பூர், பிப்ரவரி-16 – மலேசிய இந்தியர்களின் அதிகாரப்பூர்வ மக்கள் தொகையை அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என மேலவை உறுப்பினர் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
புள்ளிவிவரத் துறையின் தரவின் படி, கடந்தாண்டு 30.7 மில்லியனாக இருந்த மலேசிய மக்கள் தொகையில் 6.5 விழுக்காட்டினர் மட்டுமே இந்தியர்கள் ஆவர்.
அதாவது சுமார் 2 மில்லியன் பேர்.
ஆனால் அண்மையத் தைப்பூசக் கொண்டாட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு திரண்ட பக்தர்கள் மற்றும் பொது மக்களைப் பார்க்கும் போது, அந்த புள்ளிவிவரத்தின் துல்லியம் சந்தேகத்தை எழுப்புகிறது.
தைப்பூசத்திற்கு பத்து மலையில் மட்டுமே சுமார் 1.5 மில்லியன் பேர் திரண்டதாகக் கூறப்படுகிறது; பினாங்கு தண்ணீ மலை, ஈப்போ கல்லு மலை, கெடா சுங்கை பட்டாணி உள்ளிட்ட மற்ற முக்கிய முருகன் திருத்தலங்களிலும் கூட்டம் அலைமோதியது.
ஆக, இந்தியர்களின் மக்கள் தொகை நிச்சயம் 6.5 விழுக்காட்டை விட அதிகமாகவே இருக்குமென, சமூக ஊடகங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இவ்வேளையில், பொது சேவைத் துறையில் குறிப்பாக போலீஸ் மற்றும் இராணுவ வேலைக்கு மேலும் அதிகமான இந்தியர்களை சேர்க்குமாறு Dr லிங்கேஷ் உள்துறை அமைச்சை வலியுறுத்தினார்.
1 மில்லியனுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களில் 4.11 விழுக்காட்டினர் மட்டுமே இந்தியர்கள் என்பது மிகவும் குறைவாகும்.
இந்நிலை மாற வேண்டும்; அரசாங்கம் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றாலும், ஏராளமான இந்தியர்களும் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
நாட்டை மேம்படுத்தும் பணியில் இந்தியர்களும் இணைய வேண்டுமென்றார் அவர்.
மலேசிய இந்திய முன்னாள் முப்படை வீரர்கள் சங்கத்தின் பினாங்கு கிளையின் 15-ஆம் ஆண்டுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது Dr லிங்கேஷ்வரன் அவ்வாறு கூறினார்.