
கோலாலம்பூர், ஆகஸ்ட்-26 – இடது காலில் தொற்று ஏற்பட்டுள்ளதால் பிரபல நகைக்சுவைக் கலைஞர் சத்தியா மேல் பரிசோதனைக்காக இன்று மீண்டும் அம்பாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
ஒருவேளை தொற்று பரவல் உறுதியானால், கனுக்கால் அளவுக்கு துண்டிக்கப்படலாம் என அவர் கூறினார்.
மருத்துவர் எந்த முடிவெடுத்தாலும் அதனை தாம் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக 61 வயது சத்தியா சொன்னார்.
நீரிழிவு நோயால் ஏற்பட்ட தொற்று காரணமாக இம்மாதத் தொடக்கத்தில் சத்தியாவின் இடது காலில் 3 விரல்கள் அகற்றப்பட்டன.
அதன் பிறகு அவர் ஓய்விலிருந்து வந்தார்.
Pi Mai Pi Mai Tang Tu நகைச்சுவைத் தொடர் மூலம் புகழ்பெற்றவரான சத்தியா நீண்ட காலமாகவே நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தப் பிரச்னையால் அவதியுற்று வருகிறார்.
முன்னதாக, மலேசியக் கலைஞர்கள் சங்கமான KARYAWAN-னின் ஒத்துழைப்புடன் PEKEMA எனப்படும் மலேசிய மலாய் வாகன இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில், சத்தியா உள்ளிட்ட நலிந்த கலைஞர்களுக்கு 3,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டது.
KARYAWAN தலைவர் Datuk Freddie Fernandez மற்றும் PEKEMA பிரதிநிதி சத்தியாவின் வீட்டுக்குச் சென்று அதனை ஒப்படைத்தனர்.