
கோலாலம்பூர், செப்டம்பர்-10,முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் முன்னதாகவே விடுவிக்கப்படுவது அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்படுவது தொடர்பான விண்ணப்பம், நாளை செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படவுள்ளது.
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தலைமையில் இந்த மன்னிப்பு வாரியக் கூட்டம் நடைபெறும்.
நஜீப்பை, எஞ்சிய சிறைக் காலத்தை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிப்பது அல்லது கூடுதல் மன்னிப்பு வழங்குவதா என்பது குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளதாக சிங்கப்பூரின் The Straits Times செய்தி வெளியிட்டுள்ளது.
SRC International ஊழல் வழக்கில் நஜீப்புக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதத் தொகை, கடந்த 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாதியாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்த விவகாரம் தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்திற்குள் அரசியல் விவாதங்களை எழுப்பியுள்ளது.
ஊழல் வழக்குகளில் தண்டனைப் பெற்றவர்கள் தங்களின் முழுத் தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என்பதில் பக்காத்தான் ஹராப்பான் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
செவ்வாய்க் கிழமை இரவு நடைபெற்ற PH தலைவர்கள் மன்றக் கூட்டத்தில், பி.கே.ஆர், DAP, Amanah ஆகிய அதன் 3 உறுப்புக் கட்சிகளும் நஜீப்புக்கு அரச மன்னிப்பு வழங்கப்படுவதற்கான தங்களின் எதிர்ப்பை உறுதிச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், மன்னிப்பு வழங்குவது தொடர்பான இறுதி முடிவு மாமன்னரின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டதாகும் என்பதை அம்னோ தலைவர்கள் நினைவுறுத்தி வருகின்றனர்.
இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கும் அம்னோ பொதுப் பேரவையிலும் நஜீப் விவகாரம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



