
கோலாலாம்பூர், ஜூலை-9 – ஜோகூர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் மற்றும் 1MDB விவகாரத்தை இன்னும் சிலர் கையில் எடுத்துப் பரப்புரை செய்வதாக, மேலவை உறுப்பினரும் ம.இ.கா இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவருமான டத்தோ சிவாராஜ் சந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார்.
நஜீப் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் வேளையில், தங்களின் பலவீனங்களை மறைக்கவே இன்றும் இந்த பழைய விவகாரம் தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்படுவதாக அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், 1MDB திட்டத்தால் நாட்டுக்குப் பெரும் நஷ்டம் என்ற வாதத்தை மறுத்த அவர், முறையான சொத்து மதிப்பு, TRX திட்ட வருவாய் மற்றும் வியூகங்கள் மூலமாக 1MDB நிறுவனம் உண்மையில் 20.33 பில்லியன் ரிங்கிட் நிகர லாபத்தைக் கணக்குக் காட்டியுள்ளதாக ஓர் புள்ளிவிவர ஆதாரத்தை முன்வைத்தார்.
பழைய விவகாரங்களை மீண்டும் கையில் எடுப்பது, ஜோகூர் தேர்தலில் தங்களுக்கு ஏற்படப்போகும் பெரும் தோல்வியைக் கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுவதையே காட்டுவதாக சிவராஜ் கூறிக் கொண்டார்.
“ ஜோகூர் தேர்தலில் மீண்டும் பாரிசான் நேஷனல் வென்றால், ஆதாயம் அவர்களுக்கே, மக்களுக்குத் தான் இழப்பு. நஜீப்பின் SRC, 1MDB வழக்குகளை மறக்காதீர்கள்” என்ற, சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடுவின் ஃபேஸ்புக் பதிவைப் பகிர்ந்து, சிவராஜ் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.



