Latestமலேசியா

ஜப்பான் மாணவர் பரிமாற்றத் திட்டத்திற்குத் தேர்வு பெற்றுள்ளார் பேரா மகிழம்பூ தமிழ்ப்பள்ளி மாணவன் சி. ஜெய்டன் விக்ரம்

ஈப்போ, ஜூலை.09-2026 ஆம் ஆண்டுக்கான Bridge Summer Camp மாணவர் பரிமாற்றத் திட்டத்தில் தேசிய வகை மகிழம்பூ தமிழ்ப்பள்ளி மாணவன் சி. ஜெய்டன் விக்ரம் தேர்வாகியுள்ளார். ஈப்போ வட்டாரப் பள்ளிகளில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு மாணவர்களில் ஒரே தமிழ்ப்பள்ளி மாணவர் அவராவார். இம்மாதம்11 முதல் 20 ஆம் தேதி வரை ஜப்பானின் Fukuoka நகரில் நடைபெறும் இப்பரிமாற்றத் திட்டத்தில் பங்கேற்று, அந்நாட்டின் கல்வி, கலாசாரம் மற்றும் பண்பாட்டை அறிந்து கொள்வதுடன், மலேசியாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை ஜெய்டன் விக்ரம் அறிமுகப்படுத்தவுள்ளார். இத்திட்டத்திற்கான அனைத்து செலவுகளையும் ஈப்போ மாநகராட்சி ஏற்றுக் கொண்டுள்ளது.

 

மாணவரின் சாதனையைப் பாராட்டும் வகையில் இன்று பள்ளியில் வழியனுப்பும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. Summer Campப்பில் பங்கேற்க விக்ரம் தேர்வு செய்யப்பட்டிருப்பது பள்ளிக்கும், மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக பள்ளியின் தலைமையாசிரியர் எம். கோகிலவாணி தெரிவித்தார். இப்பயணத்தின் மூலம் பள்ளியின் மாணவராக மட்டுமன்றி, மலேசியாவின் நல்லெண்ணத் தூதராகவும் விக்ரம் திகழவுள்ளார். விக்ரமின் சாதனை, மேலும் பல தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சர்வதேச வாய்ப்புகளை நோக்கி முன்னேறுவதற்கு உந்துசக்தியாக அமையும் என்றும் கோகிலவாணி குறிப்பிட்டார்.

 

இவ்வேளையில், ஜப்பான் கோடைக்கால முகாமில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது தமது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாகும் என ஜெய்டன் விக்ரம் விவரித்துள்ளார். இந்த அரிய வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இவ்வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும் ஜெய்டன் உறுதியளித்தார்.

 

இந்நிலையில், தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜெய்டன் விக்ரமின் தாயார் என். Daissy, கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்ற தேர்வுகள், பயிற்சிகள் மற்றும் மதிப்பீடுகளில் தங்களது மகன் முழு அர்ப்பணிப்புடன் பங்கேற்று வெற்றி பெற்றதாகக் கூறினார். சுமார் பத்து நாட்களுக்கு மகனைப் பிரிந்திருக்க வேண்டியது வருத்தமாக இருந்தாலும், இந்த சர்வதேச அனுபவம் அவரது எதிர்கால வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பாக அமையும் என அவர் நம்பிக்கையை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!