
சிலாங்கூர் கராத்தே-டோ கோஜு-காய் சங்கத்தின் (Karate-Do Goju Kai ) ஏற்பாட்டில், 15ஆவது கே.கே. மார்ட் கோஜு-காய் சிலாங்கூர் பொது கராத்தே சாம்பியன்ஷிப் 2026 போட்டி, நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் செர்டாங் சவுத் சிட்டி பிளாசாவில் நடைபெற்றது. இப்போட்டியில் மலேசியா மற்றும் ஏழு வெளிநாடுகளைச் சேர்ந்த மொத்தம் 550 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்போட்டி, தொடர்ந்து 15ஆவது ஆண்டாக நடத்தப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம், புருனே, இந்தோனேசியா, சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இம்முறை கலந்து கொண்டனர்.
இளம் தலைமுறையினரிடையே ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் விளையாட்டு உணர்வை வளர்ப்பதே இத்தொடரின் முக்கிய நோக்கம் என கே.கே. மார்ட் நிறுவனப் பிரதிநிதி தெரிவித்தார். இப்போட்டிக்கு நிறுவனம் நிதியுதவி வழங்குவதுடன், எதிர்கால கராத்தே சாம்பியன்களை உருவாக்குவதற்கும் ஆதரவளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், பயிற்றுநர்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினரின் அர்ப்பணிப்பால் போட்டி சிறப்பாக நடைபெறுவதாக சிலாங்கூர் கராத்தே-டோ கோஜு-காய் சங்கத் தலைவர் Master Yong Jan Balam தெரிவித்தார். எதிர்காலத்தில் விநியோகஸ்தர்கள் மற்றும் வணிகப் பங்காளிகளையும் இணைத்து, இப்போட்டியை மேலும் பெரிய அளவில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்போட்டி 15-வது ஆண்டை எட்டியுள்ளது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என கே.கே மார்ட் தோற்றுநரும் தலைமை செயல்முறை அதிகாரியுமான டத்தோ ஸ்ரீ டாக்டர் கே.கே. சாய் தெரிவித்தார்.
இதனிடையே, கே.கே. மார்ட் நிறுவனர் டத்தோ ஸ்ரீ டாக்டர் கே.கே. சாயின் தொடர் ஆதரவாலேயே இப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுவதாக போட்டி ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் சிதம்பரம் தெரிவித்தார்.
இனி வரும் ஆண்டுகளில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.



