
பெட்டாலிங் ஜெயா, நவ.24-தமிழ், ஆங்கிலம், மலாய் ஆகிய மூன்று மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள ‘நற்றமிழ்ப் பட அகரமுதலி’ நூல் வரும் நவம்பர் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியீடு காணவுள்ளது. இந்நூலை த.செ. இளங்குமரன் எழுதியுள்ளார். மூன்று மொழிகளில் படங்களுடன் அமைந்துள்ள இந்நூல், தமிழ், ஆங்கிலம், மலாய் ஆகிய மொழிகளை உள்ளடக்கியதாகும்.
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அருக்காணி பசுமை மையத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், தொல்காப்பியச் செம்மல் இரா. திருச்செல்வனார் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்வு மாலை 3.30 மணிக்கு சிற்றுண்டியுடன் நிகழ்ச்சி தொடங்கும்.
இந்நிகழ்வில் மருத்துவர் செம்மல் தமிழ்த்திரு செல்வம் செல்வப்பனின் வரவேற்புரை, கோவை பேரூர் ஆதீனத்தின் கலை மடத்தைச் சேர்ந்த சிவஞானியலை சுந்தர அடிகளின் ஆசிரியுரை, நூலாசிரியர் த.செ. இளங்குமரனின் உரை, தமிழ்த்திரு க. சுந்தரசனின் நன்றியுரை ஆகியவையும் இடம் பெறவுள்ளன.
இவ்வேளையில் தாம் உருவாக்கியுள்ள இந்நூல் குறித்து பேசிய த.செ. இளங்குமரன், நல்ல தமிழ்சொற்களைக் கொண்டிருப்பதால் ‘நற்றமிழ்ப் பட அகரமுதலி’ என இந்நூல் பெயரிடப்பட்டதாகத் தெரிவித்தார். இந்நூலை உருவாக்கும் எண்ணம் எப்படி தோன்றியது என்ற விவரங்களையும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
பொறியியலாளரான இளங்குமரன், தமிழ் மீது உள்ள பற்றும் ஆர்வமுமே இந்நூலை உருவாக்கத் தம்மைத் தூண்டியதாகவும் குறிப்பிட்டார்.
இதனிடையே இந்நிகழ்வு குறித்த மேல் விவரங்களை அதன் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த K. Sundarasan இவ்வாறு விவரித்தார்.
நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் +60 16-542 8075 அல்லது +60 13-968 1071 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் திரளாகப் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர்.



