
புத்ராஜெயா, நவம்பர்-24,35-ஆவது மலேசியத் திரைப்பட விழாவில், உள்ளூர் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த கலைஞர்கள் 4 விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளனர்.
இந்த வெற்றி, மலேசியத் தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாகத் தொடர்புத் துணையமைச்சர் தியோ நீ சிங் பாராட்டியுள்ளார்.
Macai திரைப்படத்திற்காக Sun-J பெருமாள் மற்றும் சிவானந்தம் ஆகியோர் சிறந்த மூலக் கதைக்கான விருதை வென்றனர்.
அதே திரைப்படத்தில் நடித்த குபேன் மகாதேவன், சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனிடையே, திரைத்துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பங்களித்த Suhan எனப்படும் சுகன் பஞ்சாட்சரத்திற்குச் சிறப்புக் கலைஞர் விருது வழங்கப்பட்டது.
மேலும், Sun-J இயக்கிய Blues திரைப்படத்திற்காக Skyzen Studios நிறுவனம் சிறந்த போஸ்டருக்கான விருதை வென்றது.
இந்த அங்கீகாரங்கள், உள்ளூர் தமிழ் திரைப்படக் கலைஞர்களின் திறமைக்கும் படைப்பாற்றலுக்கும் கிடைத்த வெற்றி எனத் தியோ நீ சிங் குறிப்பிட்டார்.
இது மேலும் பல தரமான தமிழ் திரைப்படங்கள் உருவாக ஊக்கமளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.



