
புத்ராஜெயா, நவ.23-விடுதி வசதியுடன் கூடிய பள்ளிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள பள்ளி விடுதிகளில் கூடுதல் வார்டன்களை நியமிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் விடுதி நிர்வாகத்தை மேம்படுத்துவதுடன், வார்டன் பொறுப்புகளை ஏற்கும் ஆசிரியர்களின் பணிச் சுமையையும் குறைக்க முடியும் என கல்வித் தலைமை இயக்குநர் Azam Ahmad தெரிவித்தார்.
கடந்தாண்டு தொடங்கப்பட்ட மலேசிய குறுகியகால வேலை வாய்ப்புத் திட்டமான MySTEP மூலம் உதவி விடுதி வார்டன்களை நியமிக்கப்பட்டு வருவதாகவும், இத்திட்டம் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் தொடரும் எனவும் அவர் கூறினார். ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் விகிதம் தற்போது 99 விழுக்காடாக உயர்ந்துள்ளதால், கூடுதல் ஆசிரியர்களை விடுதி வசதி கொண்ட பள்ளிகளுக்கு மாற்றி நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
விடுதிகள் மாணவர்கள் தங்கும் இடங்கள் மட்டுமல்ல; அவர்களின் ஆளுமை, திறன்கள் மற்றும் கல்வி வளர்ச்சிக்கும் உதவும் முக்கியச் சூழலாகும். எனவே, மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகளை வழிநடத்தவும், கல்வி சார்ந்த செயல்பாடுகளைத் திட்டமிடவும் ஆசிரியர்களின் பங்களிப்பு தொடர்ந்து அவசியம். அதேவேளையில், பள்ளிகளின் இடம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப விடுதி நிர்வாகத்தை மேம்படுத்தும் வழிமுறைகள் ஆராயப்படும் என Azam Ahmad தெரிவித்தார். நாடு முழுவதும் 10,259 பள்ளிகள் இருப்பதால், கூடுதல் பணியாளர்களை நியமிப்பதற்கு முறையான திட்டமிடல் தேவை. அதனை உடனடியாகச் செயல்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
இவ்வேளையில், பேராக்கில் கோலா கங்சார் மலாய் கல்லூரியில் மூன்றாம் படிவ மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை, எவ்விதத் தலையீடும் இன்றி இருக்க காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக Azam Ahmad தெரிவித்தார். சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கும் பள்ளிச் சமூகத்திற்கும் தேவையான ஆதரவை அமைச்சு தொடர்ந்து வழங்கும் என்றாரவர்.
விடுதி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை மேம்படுத்த உதவி வார்டன்கள், வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து மறுஆய்வு செய்யப்படுவதாகக் கல்வி அமைச்சர் Fadhlina Sidek முன்னதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



