
ஷா ஆலாம்- கடந்த 26 ஆண்டுகளாகக் காத்திருந்தும், பணம் செலுத்தி வாங்கிய வீடுகளுக்கான சாவிகளைக் கூடப் பெற முடியாத அவலம்! வீடு வாங்கியவர்களில் சிலர், தங்களது கனவு இல்லத்தில் குடியேறுவதற்கு முன்பே உயிரிழந்த நிலையில், ஆண்டுகள் பல கடந்தும் தீர்வின்றித் தொடரும் இந்தப் பிரச்சினையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள பாதிக்கப்பட்ட மக்கள்! சிலாங்கூர், ஷா ஆலாமிலுள்ள Bandar Pinggiran Shah Alam- இல், U5 குறைந்த விலை வீடமைப்புத் திட்டத்தில் இந்த அவலநிலை தொடர்ந்து வருகிறது.
கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி, Unique Creation எனும் ஆரம்ப மேம்பாட்டாளருடன், பாதிக்கப்பட்ட வீடு வாங்கியோர்கள், விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தில் (Perjanjian Jual Beli (S&P) கையெழுத்திட்டனர். எனினும், திட்டம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, 2010ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி ECL Management Sdn. Bhd-இடம் இத்திட்டம் வழங்கப்பட்டது. இருப்பினும், வீடுகளை ஒப்படைப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்ந்து தள்ளிப்போடப்பட்டு வருவதால், 26 ஆண்டுகளாகியும் தங்களது சொந்த வீட்டில் குடியேற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டோர் வேதனை தெரிவித்தனர்.
இதற்கிடையில், LAD இழப்பீட்டைத் துறப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுக்கும் வீடு வாங்கியோருக்கு வீட்டின் சாவி வழங்கப்படாது என மேம்பாட்டாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், புதிய விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு சிலர் வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், வீடுகளின் கட்டமைப்பு, சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நீடிப்பதோடு, நில வரியைக்கூடச் செலுத்திய சிலரால் இன்னும் தங்களது வீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சிலாங்கூர் உரிமைக் கட்சித் தலைவர் ஆசிரியர் குணசேகரன் குப்பன் மற்றும் U5 குடியிருப்புப் பகுதி குழு உறுப்பினர் V.S. ராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட வீடு வாங்கியோர் இன்று தங்களது நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரி சிலாங்கூர் மாநில முதலமைச்சரிடம் மனு ஒன்றைச் சமர்ப்பித்தனர். அம்மனுவைப் பெற்றுக்கொண்ட சிலாங்கூர் மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி (Ketua Pembangkang Dewan Negeri Selangor disandang oleh Dato’ Seri Mohamed Azmin bin Ali), இந்த விவகாரம் தீவிரமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும், இதனை மாநில முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லவிருப்பதாகவும் உறுதியளித்தார்.
இதனிடையே, பாதிக்கப்பட்டவர்கள் சிலர் இப்பிரச்சனையைக் குறித்தும், வீடுகளை வாங்க பலர் காத்திருந்து, வீடுகளில் குடிநுழையாமலேயே, சிலர் மரணமடைந்துவிட்டதாகவும், தங்களின் மன வேதனைகளை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டனர்
இனியும் வெறும் வெற்று வாக்குறுதிகள் வேண்டாம், தங்களுக்குரிய வீடுகளின் சாவியே வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர்கள் காத்திருக்கின்றனர்.



