Latestமலேசியா

தரவு மையங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நீர் கட்டணம் உயர்த்தப்படாது: துணை அமைச்சர் தகவல்

கோலாலம்பூர், நவ.23-நாட்டில் தரவு மையங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, வீட்டு உபயோகத்திற்கான நீர் கட்டணங்கள் உயர்த்தப்படாது என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. தரவு மையங்களின் தேவையைக் காரணம் காட்டி நீர் அல்லது மின்சாரக் கட்டணங்களை உயர்த்தி மக்களுக்குச் சுமையை ஏற்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என ஆற்றல் மாற்றம் மற்றும் நீர் உருமாற்றத் துறை துணை அமைச்சர் Abdul Rahman Mohamad தெரிவித்தார்.

தரவு மையத் திட்டங்கள் நாட்டின் நீர் விநியோகத்தைப் பாதிக்காத வகையில், ஒவ்வொரு திட்டத்திற்கும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். போதுமான நீர் விநியோகம் இல்லாத இடங்களில், கணிசமான முதலீடுகள் கிடைத்தாலும் அத்திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என நாடாளுமன்றத்தில் கேள்வி-பதில் நேரத்தின்போது அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை தரவு மையங்களில் குளிரூட்டும் தேவைகளுக்காக, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர், மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் மற்றும் மழைநீர் சேகரிப்பு போன்ற மாற்று நீர் ஆதாரங்களைப் பயன்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் துணையமைச்சர் தெரிவித்தார்.

அதன் ஒரு பகுதியாக, Indah Water Konsortium மற்றும் Johor Special Water ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, ஜோகூரில் உள்ள தரவு மையங்களின் குளிரூட்டும் தேவைகளுக்காக நாளொன்றுக்கு 12 மில்லியன் லிட்டர் வரை உயர்தர சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கப்படுகிறது. மேலும், தீபகற்ப மலேசியாவில் உள்ள நான்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் மறுபயன்பாட்டு நிலையங்கள், நாளொன்றுக்கு மொத்தம் 19.5 மில்லியன் லிட்டர் வரை நீர் வழங்கும் திறனைக் கொண்டுள்ளதாக Abdul Rahman கூறினார்.

தரவு மையத் துறை நாட்டின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக இருக்கிறது. இத்துறையின் வளர்ச்சி நாட்டுக்கும் திட்டங்கள் அமைந்துள்ள மாநிலங்களுக்கும் வருவாய் மற்றும் பொருளாதாரப் பலன்களைத் தொடர்ந்து வழங்குவதை அரசாங்கம் உறுதிப்படுத்தும். அதே சமயம், மக்களின் அத்தியாவசிய நீர் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!