
ஜாசின், நவம்பர்-24,மலாக்கா, MRSM துன் கஃபார் பாபா கல்லூரி மாணவர்களுக்குச் சரியாக வேகாத கோழி இறைச்சி வழங்கப்பட்ட விவகாரத்தில், உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாரா தலைவர் டத்தோ Dr அஸ்ரஃப் வாஜ்டி டுசுகி உத்தரவிட்டுள்ளார்.
கல்லூரி உணவகத்தின் உணவுத் தரம் மோசமாக இருப்பதாகப் பல மாணவர்களும் பெற்றோர்களும் நேரடியாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
குறிப்பிட்ட உணவு விநியோக நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைய இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், ஒப்பந்தம் முடியும் தறுவாயில் தரத்தைக் குறைப்பது வாடிக்கையாகிவிட்டதாக அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தற்போது SPM தேர்வை எழுதி வரும் படிவம் 5 மாணவர்களின் நலனில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது என அஸ்ரஃப் வாஜ்டி திட்டவட்டமாகக் கூறினார்.
இது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு கல்லூரி முதல்வருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, எதிர்கால மாரா ஒப்பந்தங்களில் இருந்து நிரந்தரமாகத் தடை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.



