
கோலாலம்பூர், நவம்பர்-24,மேலதிகாரியின் முறைகேட்டைத் துணிச்சலாக அம்பலப்படுத்திய இந்தியப் பெண் அதிகாரிக்குப் பாதுகாப்பு வழங்குவதாக, எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான AKPS-ஸின் தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ Mohd Shuhaily Mohd Zain உறுதியளித்துள்ளார்.
KLIA 2 வழியாக, முறையான பயண ஆவணங்களின்றி வெளிநாட்டுப் பெண் ஒருவரை நாட்டுக்குள் அழைத்து வந்ததாகச் சந்தேகிக்கப்படும் AKPS அதிகாரி ஒருவர் அண்மையில் கைதுச் செய்யப்பட்டார்.
40 வயது மதிக்கத்தக்க அந்த அதிகாரியின் முறைகேட்டை அம்பலப்படுத்திய இந்தியப் பெண் அதிகாரியின் துணிச்சலை Shuhaily வெகுவாகப் பாராட்டினார்.
அந்தப் பெண் அதிகாரியை விரைவில் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கவிருப்பதாகவும், எந்தச் சூழ்நிலையிலும் அவருக்குத் துணையாக இருக்கப் போவதாகவும் அவர் உறுதியளித்தார்.
AKPS-ஸில் நிலவும் தவறான பணிக் கலாச்சாரத்தை மாற்றுவதற்கு, இத்தகைய துணிச்சலான ஓர் அதிகாரியே போதுமானவர் என்றும் Shuhaily பெருமையுடன் குறிப்பிட்டார்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட முறைகேட்டின் பின்னணியில் செயல்படும் பெரிய குற்றக் கும்பலையும் போலீஸ் அம்பலப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.



