
கோலாலம்பூர், நவ.24-மலேசிய இந்திய ஆய்வு மையத்தை (MIRC) நிறுவியிருப்பது, நாட்டின் உண்மையான வரலாற்றைப் பாதுகாப்பதற்கான முக்கிய முயற்சியாகும் என மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்திய முன்னோர்களின் தியாகங்களும் பங்களிப்புகளும் முறையாக ஆவணப்படுத்தப்படாவிட்டால், அவை அடுத்த இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளில் மறக்கப்படக்கூடும். எனவே, அவர்களின் வரலாற்றை ஆதாரங்களுடன் பதிவு செய்வது வரலாற்று நீதியையும் சமூக அடையாளத்தையும் பாதுகாக்க அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
MIRC வாயிலாக முன்னோர்களின் வரலாற்று ஆவணங்கள், வாய்மொழி வரலாறுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் காலவரிசைகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு வெளியிடப்படும். இவை பொது ஆவணக் காப்பகங்கள், தேசிய அருங்காட்சியகங்கள் மற்றும் பள்ளிப் பாடத்திட்டங்களில் இடம்பெறுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.
குறிப்பாக, 1881 முதல் 1939 வரையிலான காலகட்டத்தில் தென்னிந்தியாவிலிருந்து, பெரும்பாலும் தமிழர்கள், கங்காணி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் முறைகளின் கீழ் மலாயாவுக்கு அழைத்து வரப்பட்டு பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினர். அடர்ந்த காடுகளைச் சீரமைத்தல், ஆயிரக்கணக்கான மைல் சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை அமைத்தல், துறைமுகங்கள், குடிநீர் விநியோகத் திட்டங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உருவாக்குவதில் அவர்கள் உழைத்தனர்.
மேலும், தோட்டக் குடியிருப்புகளில் கடுமையான சூழல், வெப்பமண்டல நோய்கள் மற்றும் சமூகத் தனிமை போன்ற சவால்களுக்கு மத்தியிலும் இந்தியத் தொழிலாளர்கள் ஆற்றிய பங்களிப்பு, மலாயாவை உலகின் முன்னணி இயற்கை ரப்பர் ஏற்றுமதி நாடாக உருவாக்க உதவியது. இத்தகைய தியாகங்கள் நாட்டின் வரலாற்றில் உரிய அங்கீகாரம் பெற வேண்டும் என சரவணன் வலியுறுத்தினார்.
மலேசியாவைக் கட்டியெழுப்புவதில் ஒவ்வொரு சமூகத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு. அவ்வகையில், இந்திய முன்னோர்களின் பங்களிப்புகளை ஆதாரங்களுடன் பாதுகாத்து, அவர்களின் பாரம்பரியத்தை எதிர்காலத் தலைமுறையினரும் அறிந்து பெருமைப்படும் வகையில் MIRC செயல்படும் என அவர் தெரிவித்தார்.



