Latestமலேசியா

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு விநியோகத்தை நிலைப்படுத்தி பணவீக்கத்தை நிர்வகிக்கும் அரசாங்கத்தின் திறனே காரணம் – KPDN அமைச்சர் அர்மிசான் தகவல்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-16 – இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 4.4 விழுக்காடாக பதிவாகியிருப்பதானது, தனியார் துறை ஆதரவுடன் விநியோகத்தை நிலைப்படுத்தி, பணவீக்கத்தை நிர்வகிக்கும் அரசாங்கத்தின் திறனுக்கு சான்றாகும்.

உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் மொஹமட் அலி அதனைத் தெரிவித்தார்.

உள்நாட்டுத் தேவைகள் குறிப்பாக குடும்பங்களின் செலவினம் 5.3 விழுக்காடு உயர்ந்ததும் அதற்கு முக்கியக் காரணமாகும்.

அதே சமயம், சேவைத்துறை குறிப்பாக மொத்த மளிகை வியாபாரத் துறை, உணவு மற்றும் பானங்கள் துறை தொடர்ந்து முதன்மை பங்களிப்பாளர்களாக நீடிக்கின்றன.

முந்தைய காலாண்டில் 1.5 விழுக்காடாக இருந்த பணவீக்க விகிதமும் இரண்டாவது காலாண்டில் 1.3 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது.

இந்த முன்னேற்றம் தொடரும் என, Ali, Muthu & Ah Hock Kopitiam கடைக்கு மலேசிய சாதனைப் புத்தகத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்ட நிகழ்வில் பேசிய போது அர்மிசான் கூறினார்.

தேசிய மாதத்தை ஒட்டி சிறப்புக் கழிவு விலையிலான உணவுப் பட்டியலும் அதன் போது அறிமுகப்படுத்தப்பட்டது.

அவ்வகையில் இந்த தேசிய மாதக் கொண்டாட்டம் நெடுகிலும் நாசி லெமாக் உணவை அதன் அசல் விலையான RM 13.90-க்கு பதிலாக RM6.80-க்கு விற்கும் Ali, Muthu & Ah Hock Kopitiam கடையை அர்மிசான் பாராட்டினார்.

இதுபோன்ற நடவடிக்கைகளை மற்ற குறு, சிறு, நடுத்தர வணிகர்களும் பின்பற்ற வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இவ்வேளையில் ஹலால் சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறைகளை எளிதாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

இன்றைய நிகழ்வில், Most Nasi Lemak Plates Sold In Malaysia அல்லது மலேசியாவிலேயே அதிகளவில் நாசி லெமாக் தட்டுகளில் விற்கப்பட்டதற்கான மலேசிய சாதனை அங்கீகாரமும் இந்த Ali, Muthu & Ah Hock Kopitiam கடைக்கு வழங்கப்பட்டது.

2012 முதல் Nasi Lemak Gempak Sdn Bhd நிறுவனம் நடத்தி வரும் இந்த Ali, Muthu & Ah Hock Kopitiam கடை தற்போது ஹலால் சான்றிதழைப் பெற்றிருப்பதோடு, கிள்ளான் பள்ளத்தாக்கில் மொத்தம் 18 கிளைகளைக் கொண்டுள்ளது.

நாடளாவிய நிலையில் மேலும் புதியக் கிளைகளைத் திறக்க உத்தேசித்துள்ளதாக Nasi Lemak Gempak Sdn Bhd-டின் இயக்குநர் Ng Lee Tieng கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!