சுங்கை சிப்புர், அக்டோபர் 7 – நாட்டின் 530வது தமிழ்ப்பள்ளியாக மிகவும் பிரமாண்டமாக காட்சியளிக்கும் சுங்கை சிப்புட், ஈவூட் தமிழ்ப்பள்ளி நேற்று அதிகாரப்பூர்வமாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் திறப்பு விழா கண்டது.
மாணவர்கள் கல்வி பயில்வதற்காகக் கடந்த மார்ச் மாதம் திறந்து விடப்பட்ட இப்பள்ளி, நேற்று 1000க்கும் மேற்பட்ட சுற்று வட்டார மக்களின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
13.9 மில்லியன் ரிங்கிட் செலவில், 6 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டிருக்கும் இப்பள்ளியின் திறப்பு விழாவின்போது பேசிய பிரதமர், தமிழ் சீனம் உட்பட தாய்மொழிக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பது அரசாங்கத்தின் கொள்கை என குறிப்பிட்டார்.
இதனிடையே, ஹீவூட் தமிழ்ப்பள்ள மட்டுமல்ல, சிலாங்கூரில் சீபில்டு தோட்டத் தமிழ்ப்பள்ளி, சாகா தோட்டத் தமிழ்ப்பள்ளி, பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகியவையும் இவ்வாண்டு திறக்கப்பட்டு மாணவர்களுக்குக் கல்வி கற்கும் வசதியை அரசாங்கம் ஏற்படுத்தி தந்துள்ளதைப், பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக், 6 புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டப்போவதாகக் கடந்த 2012 ஜனவரி 10ஆம் திகதி, கின்றாரா தமிழ்ப்பள்ளியில் அறிவிப்புச் செய்தார்.
அந்த அறிவிப்பால் இறுதியாக கட்டி முடிக்கப்பட்ட 530வது தமிழ்ப்பள்ளிதான், இந்த சுங்கை சிப்புட் ஈவுட் தமிழ்ப்பள்ளி எனப் பள்ளி வாரியத் தலைவர் தியாகராஜன் தெரிவித்தார்.
பேராக் மாநிலத்திலேயே மிகப்பெரிய தமிழ்ப்பள்ளியாக உருவெடுத்துள்ள இப்பள்ளி நவீன வசதிகளையும் உள்ளடக்கிய ஒன்றாகும்.
இங்கு விளையாட்டு திடல், அறிவியல் கூடம், கலைக்கல்வி அறை, குறைநீக்கல் கற்றல் கற்பித்தல் அறை எனச் சகல வசதிகளும் இருப்பதாகப் பள்ளியின் தலைமையாசிரியர் பொன்மணி கூறினார்.
பாலர்பள்ளி மாணவர்கள் உட்பட ஏறக்குறைய 110 மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வருவதாக தலைமையாசிரியர் தெரிவித்தார்.
இதனிடையே, புதிய பள்ளியில் கல்வி கற்பது குறித்து மாணவர்களும் பெற்றோர்களும், இவ்வாறு தங்களது மகிழ்ச்சியை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டனர்.
நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரனி முஹம்மத், துணைக் கல்வி அமைச்சர் வோங் கா ஓ, நாட்டின் தலைமை செயலாளர் என சுங்கை சிப்புட் வட்டார மக்கள் கலந்து கொண்டனர்