
கோலாலம்பூர், ஏப் 21 – 19 பேர் கைது செய்யப்பட்டதன் மூலம் நாணய பரிமாற்று வர்த்தகம் போர்வையில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல், ஏப்ரல் 16 ஆம்தேதி முறியடிக்கப்பட்டது.
கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதிலும் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம் 24 முதல் 48 வயதுக்குட்பட்ட ஏழு பெண்கள், உட்பட 12 உள்ளூர் ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறைத் இயக்குநர் டத்தோ உசேய்ன் உமர் கான் (Hussein Omar Khan ) தெரிவித்தார்.
இந்த கும்பலிடமிருந்து போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட 4.9 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு நாணயங்களில் உள்ள பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
தாமான் வாஹ்யுவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் முதல் சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கோலாலம்பூர் மற்றும் கெப்போங்கில் மேற்கொண்ட நடவடிக்கையில் அந்த கும்பலின் இதர உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இக்கும்பலிடமிருந்து ஒட்டு மொத்தமாக 14.15 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களும் மற்றும் இதர சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றில் Rolls-Royce Cullian Black Badge, Porsche Tayxan 4S, Mercedes Benz AMG உட்பட பல்வேறு 18 ஆடம்பர கார்களும் அடங்கும் என புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உசேய்ன் தெரிவித்தார்.



