சிங்கப்பூர் செல்லும் மலேசியர்கள் பயணத்தை முன்கூட்டியே தொடங்க அறிவுறுத்தல்

ஜோகூர் பாரு, ஜூலை 21 – சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள், பங்குனான் சுல்தான் இஸ்கண்டார் (BSI) எல்லைச் சாவடியில் காலை நேர நெரிசலைக் குறைக்க, வழக்கத்தை விட முன்கூட்டியே பயணத்தைத் தொடங்குமாறு மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை (MCBA) அறிவுறுத்தியுள்ளது.
காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பெரும்பாலானோர் ஒரே நேரத்தில் எல்லைச் சாவடிக்கு வருவதால், குடிநுழைவு சோதனை மையங்களில் கடும் நெரிசல் ஏற்படுவதாக MCBA தெரிவித்துள்ளது. இதனால், பயண நேரத்தை மாற்றி நெரிசல் அதிகமாக இருக்கும் நேரத்தைத் தவிர்க்குமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
MyNIISe செயலியைப் பயன்படுத்துவோர், சோதனைச் சாவடிக்கு வருவதற்கு முன்பே தங்களின் QR குறியீட்டை உருவாக்கி புதுப்பித்திருக்க வேண்டும் என்றும், சரியான சோதனைப் பாதையைப் பயன்படுத்தி அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலேசியா–சிங்கப்பூர் நில எல்லையை தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கடந்து செல்கின்றனர்.



