
கோலாலம்பூர், செப்-04- சிங்கப்பூரில் உள்ள 16.6 ஹெக்டேர் நிலத்தை விற்பனை செய்யும் தமது திட்டங்களை, 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வரி தொடர்பான விவகாரம் தாமதப்படுத்துவதாகக் கூறப்படுவதை இடைக்கால ஜோகூர் சுல்தான் Tunku Mahkota Ismail Sultan Ibrahim மறுத்துள்ளார்.
அப்பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக அந்தத் தொகையைச் செலுத்தத் தாம் தயாராக இருப்பதாக அவர் X தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஒரு சராசரியான வரி செலுத்துபவராக அது இயல்பான ஒன்றுதான். எந்தச் சிக்கலும் இல்லை, இரு நாடுகளுக்கும் பங்களிப்பதில் மிக்க மகிழ்ச்சி. அதை இரட்டிப்பாக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
நில மேம்பாட்டுக் கட்டணம் எனும் வரியொன்று Tunku Ismailலுக்கும் நிலத்தை வாங்க முன்வருவோருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளைத் தடுப்பதாக Bloomberg அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
Tunku Ismail அந்த நிலத்தை குடியிருப்புப் பயன்பாட்டிற்காக மேம்படுத்த விண்ணப்பித்திருப்பதாக சிங்கப்பூரின் நகர்ப்புற மறுமேம்பாட்டு ஆணையம் கடந்த மார்ச் மாதம் கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. உயர்தர பங்களாக்கள் மற்றும் பிற தாழ்வான குடியிருப்புகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில், அவ்விடத்தை மறு மண்டலப்படுத்தவும் முன்மொழியப்பட்டிருந்தது.
அந்நிலத்தின் பயன்பாட்டு வகை மாற்றப்பட்டால், அதன் மதிப்பு 3.8 பில்லியன் முதல் 4.7 பில்லியன் சிங்கப்பூர் டாலர் வரை இருக்கலாம் என சொத்துச் சந்தை இணையதளமான Mogul.sg-இன் தலைமை ஆய்வு அதிகாரி Nicholas Mark கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



