Latestமலேசியா

காரைத் திருட 2 முதல் 5 நிமிடங்களே போதும்; தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திருடர்கள் — புக்கிட் அமான்

கோலாலம்பூர், செப்-4–வாகனத் திருட்டுக் கும்பல்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விலை மதிப்புமிக்கக் கார்களை வெறும் இரண்டு முதல் ஐந்து நிமிடங்களுக்குள் திருடி வருவதாக புக்கிட் அமான் தெரிவித்திருக்கிறது. சந்தையில் அதிக தேவை உள்ள வாகனங்களை குறி வைக்கும் கும்பல்கள், வாகனங்களின் பாதுகாப்பு அமைப்புகளை செயலிழக்கச் செய்ய பிரத்தியேக மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துகின்றன.

அதோடு அக்கும்பல்கள் சில சாதனங்களிடன் உதவியுடன் வாகனத்தின் மாடல் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு ஏற்ப சாவிகளை நிரலாக்கமும் உருவாக்கவும் செய்வதாக கூட்டரசு குற்றப் புலனாய்வுத்துறை இயக்குனர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

திருடப்பட்ட வாகனங்கள் பல்வேறு வழிகளில் கையாளப்படுகின்றன. சில மோட்டார் சைக்கிள்கள் மற்றும் லாரிகள் உதிரிபாகங்களுக்காக பிரித்து எடுக்கப்படுகின்றன. கார்கள் அடையாளம் மாற்றப்பட்டு மறுவிற்பனை செய்யப்படுவதுடன், உதிரிபாகங்களுக்காக பிரிக்கப்படுவதும், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர்கள் தொழிற்சாலை பாதுகாப்பு வசதிகளை மட்டும் சார்ந்திருக்கக்கூடாது. CCTV மற்றும் பாதுகாவலர்கள் உள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்துவது, ஸ்டியரிங் பூட்டு, பெடல் பூட்டு, GPS செயலி போன்ற கூடுதல் பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். ஸ்மார்ட் கீ பயன்படுத்துவோர் சாவிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதோடு, கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும் என டத்தோ எம். குமார் ஆலோசனை கூறினார்.

இதனிடையே, 2024 முதல் இவ்வாண்டு ஜூலை மாதம் வரை 682 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 33,716 வாகனங்கள் திருடப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் 104 வாகனத் திருட்டுக் கும்பல்கள் முறியடிக்கப்பட்டு 579 பேர் கைது செய்யப்பட்டனர். 386 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், 10,693 திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. 2024-ல் 14,201 ஆக இருந்த வாகனத் திருட்டுச் சம்பவங்கள், 2025-ல் 12,599 ஆகக் குறைந்து 11.3 விழுக்காடு சரிவைப் பதிவு செய்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!