Latestமலேசியா

1.7 பில்லியன் ரிங்கிட் வரி பாக்கி தொடர்பான திவால் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும் மேல்முறையீடு: நஜிப்பும் அவரது புதல்வரும் வெற்றி

புத்ராஜெயா, செப்-04-1.7 பில்லியன் ரிங்கிட் நிலுவை வரி தொடர்பாக தங்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட திவால் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தக் கோரி முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கும் அவரது மகன் Datuk Nazifuddinனும் தாக்கல் செய்த மேல்முறையீடுகள் வெற்றி பெற்றுள்ளன.

மூன்று நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இன்று ஒருமனதாக இருவரின் மேல்முறையீடுகளையும் அனுமதித்தது. அதன் வழி, அவர்களின் தடையாணை மனுக்களை நிராகரித்து உயர் நீதிமன்றம் கடந்த 2025 நவம்பர் 17-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

நஜிப்பின் வரி மேல்முறையீட்டில் தீவிரமான, முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் ஓரளவு பொதுநலன் சார்ந்த விவகாரங்கள் எழுந்துள்ளதாக நீதிபதி Datuk Dr Alwi Abdul Wahab தெரிவித்தார். குறிப்பாக, 1.69 பில்லியன் ரிங்கிட் வரி மதிப்பீட்டை கணக்கிட்ட விதம், 2019-ல் வரி மதிப்பீடுகள் திரும்பப் பெறப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்ட விவகாரம் உள்ளிட்டவற்றை ஆராய வேண்டியுள்ளதாக நீதிமன்றம் கூறியது.

மேலும், நஜிப்புக்கு எதிரான வரி விவகாரங்களும் அவரைச் சார்ந்துள்ள பிற குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருப்பதால், திவால் நடவடிக்கைகள் தொடர்ந்தால் நீதி நிர்வாகம் பாதிக்கப்படக்கூடும். ‘முதலில் செலுத்துங்கள், பின்னர் தகராறு செய்யுங்கள்’ என்ற வரி நடைமுறை, நீதியின் தேவைக்கேற்ப நீதிமன்றம் தலையிடுவதற்கு முழுமையான தடையாக இருக்கக்கூடாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இதனிடையே நஜிப்பின் மேல்முறையீட்டு தீர்ப்பு, Nazifuddin தொடர்புடைய மேல்முறையீட்டுக்கும் பொருந்தும் என ஒப்புக் கொள்ளப்பட்டதால், நீதிமன்றம் Nazifuddinனின் மேல்முறையீட்டையும் அனுமதித்தது. அம்மேல்முறையீட்டில் இருவருக்கும் தலா 30,000 ரிங்கிட் செலவுத் தொகையையும் நீதிமன்றம் வழங்கியது.

2011 முதல் 2017 வரையிலான மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான செலுத்தப்படாத வரியாக நஜிப் 1.69 பில்லியன் ரிங்கிட்டும், Nazifuddin 37.6 மில்லியன் ரிங்கிட்டும் செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் 2020-ல் உத்தரவிட்டிருந்தது. அவர்கள் அவ்வாறு செய்யத் தவறியதால் இருவருக்கும் எதிராக உள்நாட்டு வருவாய் வாரியம் திவால் நடவடிக்கைகளைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!