Latestஉலகம்

நேப்பாள பெருவெள்ளம்: இழப்பு 2.56 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது

கத்மாண்டு, செப்-04- கடந்த வாரம் நேப்பாளத்தைத் தாக்கிய பெருவெள்ளம் குறைந்தது 387.5 பில்லியன் நேப்பாள ரூபாய் (2.56 பில்லியன் அமெரிக்க டாலர் அல்லது 10.36 பில்லியன் மலேசிய ரிங்கிட்) மதிப்பிலான இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அப்பேரழிவுகரமான வெள்ளத்தில் சொத்துக்கள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

முதல் நான்கு மாத மறுசீரமைப்புப் பணிகளுக்கு மட்டும் சுமார் 52.6 மில்லியன் அமெரிக்க டாலர் (212.78 மில்லியன் மலேசிய ரிங்கிட்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக நேப்பாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது. சாலைகள், தற்காலிக தங்குமிடங்களை மீண்டும் அமைப்பது, குடிநீர் விநியோகம் மற்றும் மின்சார வசதியைச் சீரமைத்தல் ஆகியவற்றுக்கான செலவுகள் அவற்றில் அடங்கும்.

பல்வேறு தரப்புகள் மற்றும் துறைகளுடன் ஒருங்கிணைந்து அம்மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான மதிப்பீடு விரைவில் மேற்கொள்ளப்படும் என அது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 20,000 வீடுகளை மீண்டும் கட்ட வேண்டியுள்ளது. அங்கு குறைந்தது 7,500 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி, நேப்பாள-சீன எல்லைக்கு அருகிலுள்ள திரிசூலி ஆற்றில் பனிப்பாறை சரிந்ததாகக் கூறப்படும் நிலையில், அதனால் சகதி பெருவெள்ளம் ஏற்பட்டது.

அதில் 1,250-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 4,200-க்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!