புத்ராஜெயா, நவம்பர்-25, மத்திய அரசாங்க அளவில் வாரத்திற்கு நான்கரை நாட்கள் வேலை முறையை அமுல்படுத்தும் உடனடித் திட்டம் எதுவுமில்லை என, அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷாம்சுல் அஸ்ரி அபு பாக்கார் (Tan Sri Shamsul Azri Abu) Bakar கூறியிருக்கிறார்.
ஜோகூர் மாநில அளவில் அதனை அமுல்படுத்த அம்மாநில அரசாங்கம் முன்வைத்துள்ள பரிந்துரையை முதலில் புத்ராஜெயா நன்காராயும்.
எனவே, அந்த உத்தேசத் திட்டம், உற்பத்தி ஆற்றலில் கொண்டு வரப்போகும் தாக்கம் குறித்து இப்போதே கூறுவதற்கு ஒன்றுமில்லை என்றார் அவர்.
கோலாலம்பூரில் பொதுச் சேவைத் துறையின் சீர்திருத்தங்கள் மீதான தேசிய மாநாட்டை முடித்து வைத்து பேசியப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஜோகூர் அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு நான்கரை நாட்கள் வேலை முறையை அமுல்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக, அதன் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் கா’சி (Datuk Onn Hafiz Ghazi) கடந்த வியாழக்கிழமைக் கூறியிருந்தார்.
ஜோகூரில் வார இறுதி விடுமுறை, வரும் ஜனவரி 1 முதல் மீண்டும் சனி-ஞாயிற்றுக் கிழமைகளுக்கே மாறவிருப்பதை அடுத்து, அந்த நான்கரை நாட்கள் வேலை முறை பரிந்துரைக்கப்பட்டதாக அவர் சொன்னார்.