
கோலாலம்பூர், செப்டம்பர் 28 — மூன்று ஆண்டுகளாகக் காதலியுடன் செலவிட்ட அனைத்து ரசீதுகளையும் சேமித்து வைத்த காதலன், உறவு முறிந்ததும் அவற்றை மூன்று பெட்டிகளில் அனுப்பி பணத்தைக் கேட்ட சம்பவம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வழக்கமாக காதல் முடிந்ததும் பரிசுகள், புகைப்படங்கள் மற்றும் கடிதங்களைத் திருப்பிக் கொடுப்பதற்கு மாறாக, உணவு, திரைப்படம், பயணம் மற்றும் ஷாப்பிங் செலவுகளுக்கான ரசீதுகளை முன்னாள் காதலர் அனுப்பி வைத்துள்ளார்.
காதலித்தபோது ஒவ்வொரு ரசீதையும் அவர் சேமிப்பதைப் பார்த்த அப்பெண், அதற்கான காரணத்தைக் கேட்டுள்ளார். “நமது நினைவுக்காக வைத்திருக்கிறேன்” என அவர் கூறியதால், அதைப் பாசத்தின் அடையாளமாகவே அப்பெண் நினைத்துள்ளார்.
ஆனால், இருவரும் பிரிந்த சில நாட்களில் அப்பெண்ணின் வீட்டு வாசலில் மூன்று பெரிய பெட்டிகள் வந்துள்ளன. அவற்றுக்குள் மூன்று ஆண்டுகளுக்கான ரசீதுகள் அனைத்தும் ஆண்டு மற்றும் மாதம் வாரியாக நேர்த்தியாகப் பிரித்து வைக்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து, “மூன்று ஆண்டுச் செலவுகளையும் கணக்கிட்டுவிட்டேன். உங்களுக்குரிய பங்கைச் செலுத்துங்கள்” என முன்னாள் காதலர் தகவல் அனுப்பியதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
“காதல் நினைவுகளைச் சேமித்தாரா… இல்லை பிரிவுக்குப் பிறகு கணக்குக் கேட்கவே சேமித்தாரா?” என இணையவாசிகளைப் பேச வைத்துள்ள இந்த வித்தியாசமான சம்பவம், தற்போது சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.



